Sangathy News

கம்பளையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது

Colombo (News 1st) கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கம்பளை வெலிகல்ல – எல்பிட்டிய பகுதியை சேர்ந்த பெண்ணின் சடலம் இன்று முற்பகல் தோண்டியெடுக்கப்பட்டது.

கம்பளை பதில் நீதவானின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பெண் கடந்த 6 நாட்களுக்கு முன்னதாகக் காணாமல் போயிருந்தார்.

எல்பிட்டியவில் கைவிடப்பட்ட காணியொன்றில் இருந்து 22 வயதான அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், உயிரிழந்த பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் அங்கு இருந்தனர். பெற்றோர் தமது மகளின் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, சடலம் கண்டி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இதேவேளை, இந்த கொலையைச் செய்த சந்தேகத்தில் முன்னதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரது வாக்குமூலத்திற்கமைய இன்று சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

சந்தேகநபர் ஆடுகளுக்கு உணவு சேகரிப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில், அந்த பக்கமாக சென்ற பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்தமையினால், அவரை பலாத்காரமாக காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் சந்தேகநபர் யுவதியின் சடலத்தை அந்த பகுதியிலேயே புதைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version