Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா(Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் விசேட சந்திப்பொன்று நேற்று(18) இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா இதன்போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆரம்பித்துள்ள இந்த செயற்றிட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றால் இலங்கை எதிர்பார்க்கும் இலக்குகளை விரைவாக அடைய முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வருடங்களில் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கி வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலக வங்கியின் தலைவருக்கு இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை முழுமையான பொருளாதார மறுசீரமைப்பு பாதையில் பிரவேசித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த தசாப்தத்தில் அதிக பொருளாதார வளர்ச்சி வேகத்துடன், நாடு முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக சர்வதேச நாணய நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புகளை முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உலக வங்கியின் சர்வதேச நடவடிக்கைகளுக்கான தலைவர் இலங்கைக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் விஜயம் செய்யவுள்ளதாக உலக வங்கியின் தலைவர் இதன்போது கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை உலக வங்கியின் தலைவர் ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தென் கொரிய ஜனாதிபதி Yoon Suk Yeol ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று(18) இடம்பெற்றது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்றிட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தென் கொரிய ஜனாதிபதி பாராட்டினார்.
தென் கொரியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை விரைவில் மேற்கொள்ளுமாறும் தென் கொரிய ஜனாதிபதி Yoon Suk Yeol, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்தார்.
You must be logged in to post a comment.