புதிய வகை எம்பாக்ஸ் நோய் பரவல் காரணமாக காங்கோ நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது வேகமாக பரவும் என்பதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பை உலகம் அவ்வளவு எளிதில் மறந்திருக்காது. இதுவரை சுமார் 70 லட்சம் பேரை பலிவாங்கி 21ஆம் நூற்றாண்டில் பேரழிவின் சுவடாக தடம் பதித்திருக்கிறது. இதன் உருமாறிய வைரஸ்கள் அவ்வப்போது தலைதூக்கினாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் எம்பாக்ஸ் (mpox) என்ற தொற்று வைரஸ் ஒன்று காங்கோ அதிவேகமாக பரவி வருகிறது.
இந்த அம்மை நோய் ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும், தற்போது உருமாறிய ஜெனிடிக் அமைப்பால் வீரியம் அடைந்துள்ளது. இதனால் பாதிக்கும் வேகம் அதிகமாக காணப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் எம்பாக்ஸ் பாதிப்பால் இதுவரை 300 பேர் பலியாகி இருக்கின்றனர். 4,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்நாட்டில் சுகாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்குள் அடுத்தடுத்து பரவிய வண்ணம் இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது எப்படி பரவியிருக்கும் என்ற ஆராய்ந்தால், வன விலங்குகளிடம் இருந்து தான் பரவியதாக கூறுகின்றனர். அங்குள்ள மக்கள் வனப் பகுதியில் உள்ள விலங்குகள் உடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருந்து வருகின்றனர். இதனால் ஊருக்குள் பரவியிருக்கலாம். அதன்பிறகு உடலுறவு கொள்வதன் மூலமும் பரவுவதாக கூறுகின்றனர்.
இந்த எம்பாக்ஸ் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளில் உலக சுகாதார நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தற்போதைய சூழலில் காங்கோவில் உள்ள மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்து எம்பாக்ஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி இருந்தால் உடனே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் மிகவும் சைலண்டாக பலருக்கு பரவி ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
பரிசோதனை தீவிரம்
இதில் சிக்கல் என்னவென்றால் காங்கோவின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மிக குறைவான நபர்களே பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் தாமாக முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யாமல் விட்டு விட்டாலும் சிக்கலாகி விடும். எனவே உரிய நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உருமாறிய வைரஸ் பாதிப்புகள் தான் விஞ்ஞானிகளுக்கு சிக்கலாக இருக்கின்றன.
தடுப்பு நடவடிக்கைகள்
இவற்றின் சரியான வடிவமைப்பை கண்டறிந்து அதற்குரிய மருந்தை செலுத்தி ஆராய்ச்சி செய்து இறுதி நிலைக்கு வருவதற்கு காலம் கடந்து விடுகிறது. பலரது உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதிலும் உருமாறிய வைரஸ்கள் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றிக் கொண்டே இருந்தால் இன்னும் சிக்கல் தான். தற்போதைய எம்பாக்ஸ் வைரஸ் உருமாறிய புதிய வைரஸாக மாறுவதற்குள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.