Sangathy
Sports

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : பஞ்சாப்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்..!

போட்டி இந்தியாவின் பல்வேறு நகங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.

அடுத்த சுற்று வாய்ப்புக்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி

பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிபிடித்து புதிய சரித்திரம் படைத்த பஞ்சாப் அணி தர்மசாலாவில் அரங்கேறிய கடந்த லீக் ஆட்டத்தில் 28 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.

தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங் (315 ரன்), பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், ரபடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார்.

தங்களது உள்ளூர் மைதானங்களான முல்லாப்பூரில் 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 தோல்வியும், தர்மசாலாவில் ஒன்றில் ஆடி அதில் தோல்வியும் கண்டுள்ள பஞ்சாப் அணி சொந்த மைதானத்தில் தங்களது பரிதாப நிலையை மாற்ற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

பெங்களூர் அணி

இதேபோல் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.

முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டு பெருத்த சரிவை சந்தித்த பெங்களூரு அணி கடந்த 3 ஆட்டங்களில் வரிசையாக ஐதராபாத் மற்றும் குஜராத்தை 2 முறை அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்கள்), கேப்டன் டுபிளிஸ்சிஸ் (352), தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், வில் ஜாக்சும், பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும்.

எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு :-

பஞ்சாப் : பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார் அல்லது ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரபடா.

பெங்களூரு : விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள் அல்லது ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Related posts

Mendis shines in rained off warm-up game

Lincoln

Sri Lanka needs to be bold in New Zealand

Lincoln

People are cheering for the Brazilian team

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy