Sangathy
Srilanka

ஆள் கடத்தலுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்..!

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார்.

ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கூலிப்படையாக பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்,

“ரஷ்ய-உக்ரைன் போரில் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. கடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பாதுகாப்புப் பிரதானிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு, எதிராக தராதரம் பாராமல், சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்பதை முதலில் வலியுறுத்த வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆள் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆள் கடத்தல் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிக சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆள் கடத்தலில் பலர் சிக்கி உள்ளனர். எனவே, இந்த ஏமாற்று முயற்சிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது. இந்த ஆள் கடத்தல் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தால் 0112 401 146 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோருகிறோம்.

அத்துடன், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி முற்றாக அங்கவீனமடைந்த அல்லது யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினருக்கு 55 வயது வரையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 55 வயதின் பின்னர் அவர்களுக்கு சம்பளமோ அல்லது ஓய்வூதியமோ வழங்கப்படாதது குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் கவனம் செலுத்தியது.முப்படைகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த சலுகை சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். எனவே, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து அனுமதியைப் பெற எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், சட்டபூர்வமாக இராணுவத்தை விட்டு வெளியேறாமல் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.தற்போது பொது மன்னிப்புக்காக சுமார் 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 357 ஆக காணப்பட்டது.

அத்துடன் சட்டவிரோதமான முறையில் சேவையிலிருந்து விலகி மீண்டும் பணிக்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை 799 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இராணுவ வீரர்களுக்கான காணிகளை விரைவாக வழங்குவதற்கும் சலுகைகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்றை அமைத்துள்ளார். உறுமய வேலைத்திட்டத்துடன் ஒரே நேரத்தில் இடம்பெறும் இந்தப் பணிகளுக்கு காணி அமைச்சும் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது. இது இராணுவ வீரர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட தனித்துவமான நடவடிக்கை என்பதை குறிப்பிட வேண்டும்” என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

Related posts

இரண்டு போகத்திற்குரிய பசளையை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் அரசாங்கம்…

Gowry

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் மாயம்..!

Tharshi

பெண் வைத்தியரை கடத்த முயன்ற அம்பியூலன்ஸ் சாரதி..!

Tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy