தெலுங்கில் ‘கேங்ஸ் ஆஃப் கோதவரி’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ண சைதன்யா இயக்கி உள்ளார். கதாநாயகனாக விஷ்வாக் சென் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் நேகா செட்டி, சாய் குமார், நாசர், கோபராஜு ரமணா, ஆயிஷா கான் உள்பட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் எதற்காக அப்படி செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் நடிகை அஞ்சலியும் மற்றவர்களும் இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டு சிரிக்கின்றனர்.
வீடியோவில், நிகழ்ச்சி மேடையில் அனைவரும் நின்றிருக்க அஞ்சலியை நோக்கி கையை நீட்டும் பாலகிருஷ்ணா தள்ளி நிற்கும்படி கூறுகிறார். இதை கவனிக்காத அஞ்சலியின் தோளை பிடித்து பின்னோக்கி தள்ளினார். இதனை சற்றும் எதிர்பாராத அஞ்சலி 2 அடி பின்னால் சென்று நின்றார். அதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழவில்லை.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.