கேரளா விஷு பம்பர் லாட்டரி வின்னரான பாதுகாப்பு ஊழியரான விஸ்வாம்பரன் தான் ஜாக்பாட் வென்றது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கேரளா விஷு பம்பர் லாட்டரியில் முதல் பரிசான 12 கோடி ரூபாய் வென்ற விஸ்வாம்பரன் இனி வரப்போகும் பிரச்சனைகளை நினைத்தால் அச்சமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
கேரளா அரசு மலையாள புத்தாண்டை முன்னிட்டு விஷு பம்பர் லாட்டரியை அறிமுகப்படுத்தியது. இதற்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான குலுக்கல் கடந்த 29ஆம் திகதி நடைபெற்றது. இதில் முதல் பரிசான 12 கோடி ரூபாயை ஆலப்புழாவை சேர்ந்த விஸ்வாம்பரன் என்பவர் வென்றார்.
இந்நிலையில் தான் பரிசு வென்றது குறித்து மனந்திருந்து பேசி உள்ளார் விஸ்வாம்பரன்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,
ஆலப்புழாவில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசான 12 கோடி ரூபாய் விழுந்ததை அறிந்து தான் வாங்கி வைத்திருந்த லாட்டரி சீட்டில் உள்ள எண்ணை சரிபார்த்ததாகவும் தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 12 கோடி ரூபாய் விழுந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு லாட்டரி பரிசு விழுந்ததை வீட்டில் உள்ளவர்களிடமும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அன்று இரவு தான் நிம்மதியாக தூங்கியதாகவும் இதுவரை அதுபோன்று தனது வாழ்நாளில் நிம்மதியாக தூங்கியது இல்லை என்றும் விசுவாம்பரன் கூறியுள்ளார். மேலும் மறுநாள் காலைதான் லாட்டரி டிக்கெட்டை சமர்ப்பித்து பரிசு பெறும் பணிகளை தொடங்கியதாக கூறியுள்ளார்.
பழவீடு அம்மா தேவியின் அருளால் தனக்கு இந்த ஜாக்பாட் பரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 12 கோடி ரூபாய் லாட்டரி பரிசை வென்றது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்த பணத்தை எப்படி செலவு செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனக்கு லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதை அறிந்து கடன் கேட்டு யாரெல்லாம் தனது வீட்டிற்கு வந்து தொல்லை தரப் போகிறார்கள், வீட்டில் உள்ளவர்களை உறங்கவிடாமல் செய்யப் போகிறார்கள் என்று பயமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதனால் தான் ஊரைவிட்டு செல்ல வேண்டிய நிலை வருமா என்று தெரியவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார் விசுவாம்பரன். தனக்கு லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் உண்டு என்றும் கோயிலுக்கு போகும்போதும் ஸ்கூலுக்கு போகும் போதும் தான் லாட்டரி டிக்கெட் வாங்கிய ஏஜென்ட் ஆன ஜெயா தன்னிடம் லாட்டரி டிக்கெட் வாங்குமாறு வலியுறுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார்.
அவ்வப்போது தான் வாங்கிய லாட்டரியில் ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் பரிசுகள் விழுந்துள்ளதாக கூறியுள்ள அவர் முதல் முறையாக இவ்வளவு பெரிய பரிசு தொகையை வென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த லாட்டரி சீட்டும் ஜெயா வலியுறுத்தியதால்தான் தான் வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ஜாக்பாட் பரிசுகளை வென்றவர்கள் பட்ட பாட்டால் விஸ்வாம்பரன் அச்சமடைந்துள்ளார்.