விஜய்யின் GOAT படத்தில் நடிக்க மோகன் ஒப்புக்கொண்டதற்கான காரணம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிகின்றது. இந்நிலையில் GOAT படத்தின் மூலம் 80 களில் கொடிகட்டி பறந்த ஹீரோவான மோகன் மீண்டும் ரீஎன்ட்ரி தருகின்றார். வெள்ளிவிழா நாயகன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் மோகன் விஜய்யுடன் இணைந்து GOAT படத்தில் நடிப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இப்படத்தில் மோகன் வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் உட்பட பல படங்களில் மோஹனை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் மோகன் எதிலும் நடிக்கவில்லை. அவ்வளவு ஏன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்திலும் மோஹனை நடிக்க அழைத்தார் லோகேஷ்.
லியோ படத்தில் அர்ஜுன் நடித்த ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தில் மோஹனை நடிக்க வைக்கலாம் என எண்ணினார் லோகேஷ். ஆனால் அதற்கும் மோகன் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் GOAT படத்தில் மட்டும் மோகன் நடிப்பது ஏன் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
என்னவென்றால் மோகன் தற்போது ரீஎன்ட்ரி கொடுக்கும் முனைப்பில் இருக்கிறாராம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த எண்ணத்தில் இல்லாத மோகன் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார். அதற்கு ஏற்றாற்போல GOAT திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கியமான ரோலும் இருப்பதால் அப்படத்தில் நடிக்க மோகன் ஒப்புக்கொண்டுள்ளாராம்.
எனவே GOAT திரைப்படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக மோகனுக்கு மிக முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்படம் மோகனுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாகவும் இருக்கும் என்று ரசிகர்களால் கணிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.