நடிகர் சூரி, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
அந்த படத்தில் இருந்து நடிகர் சூரி, பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பெயர் பெற்றார். ஆனால் காமெடி கதாப்பாத்திரத்தில் மட்டும் நடித்துக் கொண்டு இருந்த சூரி கதாநாயகனாக ஆக நேரம் வந்தது.
சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் விடுதலை 2, கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூரி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சூரியுடன் இணைந்து சசிகுமார் , சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வெற்றிமாறனின் தயாரிப்பிலும் கதையிலும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. நகர்புறங்களை விட கிராம் புறத்தில் உள்ள ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். நாளுக்கு நாள் படத்தின் திரையரங்குகளில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேலும் இந்த படத்தில் நடிகர் சூரி முதன்முறையாக ஆக்சன் ஹீரோவாக களமிறங்கி பல்வேறு தரப்பினரடையே பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இந்த படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவையும், அதிக வசூலையும் பெற்று வருகிறது. தற்போது கிடைத்த தகவலின் படி கருடன் திரைப்படமானது உலகம் முழுவதும் 26 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டதட்ட 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து கருடன் திரைப்படமும் வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் சூரி அடுத்து நடித்து வெளிவர இருக்கும் கொட்டுகாளி மற்றும் விடுதலை2 திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.