Site icon Sangathy News

பேருந்தின் பயணப் பொதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்பு!

பேருந்தின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டாக்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பயணப்பையில் சிறிய இரும்புப் பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பண்டாரவளை காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று நேற்று (22) பிற்பகல் பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது 123 செயற்படக்கூடிய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதும், சந்தேகத்திற்குரிய எந்த நபரும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த தோட்டாக்களில் 113 பிஸ்டல் தோட்டாக்கள், ஒன்பது T56 தோட்டாக்கள் மற்றும் T56 LMG தோட்டா ஒன்றும் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பண்டாரவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Exit mobile version