Site icon Sangathy News

எரிபொருள் விநியோகஸ்தர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பு….!

எரிபொருள் முன்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான தற்போதைய விநியோக ஒப்பந்தத்தின்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் வழங்கப்படும் மூன்று சதவீத கழிவை இரத்து செய்வதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, 3 சதவீத கழிவு கொடுப்பனவு பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரையில் புதிய எரிபொருள் முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இலங்கை கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.

கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விநியோகஸ்தர்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ள நிலையில், குறித்த தீர்மானத்தினை நேற்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.

இருப்பினும், நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தைச் சீர்குலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, சிவில் சமூக அமைப்புகள் சிலவற்றினால் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

Exit mobile version