Site icon Sangathy News

இவ்வருடத்தின் முதல் காலாண்டில் தேயிலை ஏற்றுமதியில் 371 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 371 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை 355 அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், 11 வருடங்களின் பின்னர் தேயிலை ஏற்றுமதியின் மூலம், வருடமொன்றின் முதல் காலாண்டில் இவ்வாறு அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது.

இலங்கையில் அதிக வருமான ஈட்டும் துறையாக பெருந்தோட்ட கைத்தொழில் துறையை மாற்றி, அதனூடாக கிடைக்கும் வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரத்து 700 ரூபாவாக அதிகரிக்க, ஜனாதிபதி பாதீட்டில் முன்வைத்த முன்மொழிவுக்கு ஏற்ப அவர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த வருடத்தில் தலா 28 இலட்சம் ரூபாய் செலவில் 6,000 வீடுகளை அமைப்பதற்கு எதிர்பார்ப்பட்டுள்ளது.

அதற்காக, இந்திய நிதியுதவியையும், நாட்டு மக்களின் வரிப் பணத்தையும் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version