Site icon Sangathy News

அமெரிக்காவில் பனிக்குடம் உடைந்தும் செய்தியை வாசித்து முடித்த கர்ப்பிணி தொகுப்பாளர்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கர்ப்பிணி செய்தியாளரின் பனிக்குடம் உடைந்தபோதிலும் அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்றுள்ளார்.

ஒலிவியா ஜாக்கித் எனப்படும் ஆல்பனியில் வசிக்கும் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் 3 மணிநேர கடமையை முடித்துள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று Facebook நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி காலை 6 மணிக்குத் தொடங்குவதற்கு முன் தமது பனிக்குடம் உடைந்துவிட்டதாக ஜாக்கித் கூறினார்.

அதற்கு முந்திய நாளன்று உடல்நலம் சரியில்லை என்பதால் மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்குப் பிரசவ வலி வந்த அறிகுறிகள் தெரியவந்தன.

மறுநாள் காலையில் பனிக்குடம் உடைந்தும் அவர் வேலைக்குச் சென்று 3 மணிநேரம் நிகழ்ச்சியைப் படைக்கப்போவதாகக் கூறினார்.

நிகழ்ச்சியின்போது அவர் முடிந்தவரை நிகழ்ச்சியைப் படைக்கப்போவதாகவும், தாம் திடீரெனக் காணாமல்போனால் அதன் காரணம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்றும் ஜாக்கித் நகைச்சுவையாகப் பேசினார்.

குழந்தை பிறப்பதற்குக் குறிக்கப்பட்ட நாளைக் கடந்து இரு நாட்கள் ஆகிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் நகைச்சுவையான துணைத் தலைப்புகளைச் சேர்த்துக்கொண்டனர்.

வியாழக்கிழமையன்று தமக்கு மகன் பிறந்துள்ளதாக ஜாக்கித் Instagramஇல் பதிவிட்டார். அது அவரது மூத்த பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version