Site icon Sangathy News

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி ரூபாவுக்கும் அதிகம்…!

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில், நேற்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 2 நெடுநாள் மீன்பிடி படகுகளிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த படகுகளிலிருந்து சுமார் 600 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு இன்றைய தினம் வத்தளை – திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், குறித்த படகுகளிலிருந்த 11 மீனவர்களும் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.

தேவேந்திரமுனையிலிருந்து மே 14 ஆம் திகதி அன்று 6 மீனவர்களுடனும், கடந்த 6 ஆம் திகதி 5 மீனவர்களுடனும் கடலுக்குச் சென்ற படகுகளே போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், திக்கோவிட்ட துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் பார்வையிட்டிருந்தனர்.

இந்தப் போதைப்பொருட்களையும், சந்தேகநபர்களையும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version