Site icon Sangathy News

புதுமணத்தம்பதிக்கு வந்த பார்சல் : மணமகன் பரிதாபமாக பலி…!

இந்தியாவில் ஒரு புதுமணத்தம்பதிக்கு வந்த பார்சலை மணமகன் திறந்து பார்க்க முயல, அந்த பார்சலிலிருந்து வெடிகுண்டு வெடித்து அவர் பரிதாபமாக பலியானார்.

சேகருக்கும் (Soumya Sekhar Sahu, 26) ரீமாவுக்கும் (Reema, 22) திருமணமாகி ஐந்து நாட்களே ஆகியிருந்தன.

அப்போது அவர்கள் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. யாராவது திருமணப் பரிசு அனுப்பியிருக்கலாம் என எண்ணிய சேகர் அந்த பார்சலைப் பிரிக்க, அந்த பார்சலில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று பயங்கரமாக வெடித்துள்ளது.

குண்டு வெடித்ததில் சேகரும் அவரது உறவினரான ஜெமாமனி சாஹுவும் (85) கொல்லப்பட, ரீமா படுகாயமடைந்தார்.

புதுமணத் தம்பதியருக்கு யார் அந்த வெடிகுண்டை அனுப்பியது என புரியாமல் இந்த வழக்கு பெரும் குழப்பத்தை உருவாக்க, அவர்கள் வீட்டுக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில், சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு அனுப்பப்பட்டதின் பின்னணியில் மூன்று பேர் இருப்பதாகவும், அந்த பார்சலில் எழுதப்பட்டிருந்த பெயரின் பின்னணியில் ஒரு ரகசிய செய்தி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில் அந்த வெடிகுண்டு குறித்த விடயங்கள் விவரமாக எழுதப்பட்டிருந்ததைக் கண்ட பொலிசாருக்கு, அந்தக் கடிதத்தை எழுதியவரே குற்றவாளியாக இருக்கலாம் என்னும் சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த கையெழுத்தைக் கண்ட சேகரின் தாய், தனக்கு அந்தக் கையெழுத்து யாருடையது என தெரியும் என்று கூற, வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது.

ஆம், அந்த பார்சலை அனுப்பியவர் சேகரின் தாயுடன் பணி செய்த புன்ஜிலால் மெஹர் என்னும் ஆசிரியர்.

சேகரின் தாய், புன்ஜிலாலுக்கு (Punjilal Meher, 49) பதிலாக பள்ளி ஒன்றின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

ஆக, சேகரின் தாய் மீதான வெறுப்பின் காரணமாகவே அவர் வீட்டுக்கு புன்ஜிலால் வெடிகுண்டு ஒன்றை அனுப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துயர சம்பவம் நிகழ்ந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, புன்ஜிலால் குற்றவாளி என நீதிமன்றம் தற்போது முடிவு செய்துள்ளது.

இந்த சம்பவம் நிகழ்ந்தது, 2018ஆம் ஆண்டு, இந்தியாவிலுள்ள ஒடிஷா மாநிலத்தில் ஆகும்.

Exit mobile version