ரஷ்ய மற்றும் உக்ரைனிய பிரதிநிதிகள், இரண்டாவது சுற்றுச் சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இஸ்தான்புல் சென்றுள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையே நேற்றிரவு பரஸ்பர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, உக்ரைனின் பிரதி வெளிவிவகார அமைச்சர் செர்ஜி கிஸ்லிட்சியா (Sergiy Kyslytsya) ஜேர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியதாக உக்ரைனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையேயான நேரடி சந்திப்பு மற்றும் முழு அளவிலான யுத்த நிறுத்தம் உள்ளிட்ட விடயங்களை, உக்ரைன் மீண்டும் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் யுத்த கைதி பரிமாற்றத்தைத் தவிர, வேறு எந்த குறிப்பிடத்தக்க முடிவும் எட்டப்படவில்லை.
எனினும், இன்றைய கூட்டத்திற்கு முன்னர் ரஷ்யா தனது நிபந்தனைகளை வெளியிடவில்லை.
இந்த நிலையில், உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, லித்துவேனியாவில் இடம்பெறும் நேட்டோவின் உறுப்பினர்களுடனான உச்சி மாநாட்டிற்காக அங்கு சென்றுள்ளார்.
குறித்த உச்சி மாநாட்டிற்கு முன்னர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி, தொடர்ந்து இடம்பெற்று வரும் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உண்மையான வாய்ப்பு இதுவென தெரிவித்துள்ளார்.

