பல தசாப்த கால அணுசக்தி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்தினை ஈரான் நிராகரிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய ராஜதந்திரி ஒருவரினால் இந்த தகவல் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் திட்டம், ஈரானிய நலன்களை நிவர்த்தி செய்யும் வகையிலோ அல்லது யுரேனியம் செறிவூட்டல் குறித்து அமெரிக்காவின் நிலைப்பாட்டை மென்மையாக்கும் தன்மை கொண்டதாகவோ இல்லை என, அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை, ஓமானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையித் பத்ர் அல்புசைடி (Sayyid Badr Albusaidi) கடந்த வாரம் கையளித்திருந்தார்.
அவர் ஈரானிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வருகின்றார்.
ஈரானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்திய கிழக்கு விசேட பிரதிநிதி ஆகியோருக்கு இடையே இந்த விடயம் தொடர்பாக 5 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், பல முரண்பாடுகள் காரணமாகப் பல தடைகள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக, யுரேனிய செறிவூட்டலைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

