Site icon Sangathy News

4 மாதங்களில் வாகன இறக்குமதியிலிருந்து 136 பில்லியன் ரூபா வருவாயை அரசாங்கம் ஈட்டியுள்ளது

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வாகன இறக்குமதியிலிருந்து அரசாங்கம் 136 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச நிதி பற்றிய குழுக் கூட்டத்தில், அண்மையில் இலங்கை சுங்க அதிகாரிகள் இந்த விடயங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவற்றில் பெறுமதி சேர்வரி, சுங்க வரி மற்றும் சொகுசு வரி ஆகிய வரிகளும் அடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன இறக்குமதியின் ஊடாக இந்த வருடத்தில் 450 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கினை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில், இந்த இலக்கை அடைய முடியும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரையில் வாகன இறக்குமதிக்காக 596 நாணய கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 272 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது வாகன இறக்குமதிக்காகச் செலவிடும் ஒவ்வொரு டொலருக்கும் 1.5 அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தற்போது 1.7 அமெரிக்க டொலர் வருவாயினை ஈட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version