Site icon Sangathy News

இலங்கை இலங்கையில் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரிப்பு

இலங்கையில் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் மழையுடனான வானிலையால் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளது.

சுவாச நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானம் தொடர்பான விசேட வைத்தியர் அத்துல லியனபத்திரன பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது பொருத்தமானதென அவர் கூறினார்.

சுவாச நோய்கள் தொடர்பில் முதியோர், கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகள், நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட தரப்பினர் விசேட கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானம் தொடர்பான விசேட வைத்தியர் அத்துல லியனபத்திரன தெரிவித்தார்.

நீரிழிவு, சிறுநீரக நோய், புற்றுநோய் உள்ளிட்ட நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டோர் சுவாசத் தொற்றுகளுக்கு உள்ளாகும்போது உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.

சுவாச நோய்கள் ஏற்பட்டுள்ள எந்தவொரு தரப்பினரும் மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version