இந்தியாவின் அஹமதாபாத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தினால் பயணி ஒருவர் உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தின் 11 ஏ என்ற ஆசனத்தில் பயணம் செய்த பயணியே உயிர் தப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, இந்த விபத்தில் எவரும் உயிர்த்தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையிலேயே பயணி ஒருவர் உயிர் தப்பியிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது.
விபத்தின் போது குறித்த விமானத்தில் 242 பயணிகளும் 10 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவர்களில் 169 இந்தியர்களும் 53 பிரித்தானியர்களும் 7 போர்த்துக்கல் நாட்டவர்களும் கனேடியர் ஒருவரும் அடங்குகின்றனர்.
இதேவேளை, விமானத்தில் பயணித்த குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விமானம் அஹமதபாத் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் குறித்த விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளான போது முதலில் மருத்துவ கல்லூரி விடுதி ஒன்றில் மோதியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அங்கு தங்கியிருந்த சுமார் 50 மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன்காரணமாக, விமான பயணிகளை தவிர குடியிருப்பு பகுதிகளிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக, இன்று பிற்பகல் 1.17 க்கு குஜராத்தின் அஹமதாபாத் சர்தார் வல்லாபாய் பட்டேல் விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் புறப்பட்ட நிலையில், சுமார் 825அடி உயரத்தை அடைந்த போது அதற்கு மேல் அந்த விமானத்தால் உயரப்பறக்க முடியாத நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானம் தாழப்பறந்து குடியிருப்பு பகுதிக்குள் வீழ்வதை காணொளி காட்சிகள் மூலம் காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை, இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

