Site icon Sangathy News

கோவை கிங்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மதுரை பாந்தர்ஸ்!

டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கோவையில் இன்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர் ஜிதேந்திர குமார் 17 ரன்னும், சுரேஷ் லோகேஷ்வர் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாலசுப்ரமணியன் சச்சின் 15 ரன்னும், ஆண்ட்ரி சித்தார்த் 20 ரன்னும், மாதவ பிரசாத் 4 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்துள்ளது. ஷாருக் கான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

கோவை கிங்ஸ் அணி நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான ராம் அரவிந்த் மற்றும் பாலசந்தர் அனிருத் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அதிரடியாக ஆடிய பாலசந்தர் அனிருத் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சத்ருவேத், ராம் அரவிந்துடன் ஜோடி சேர்ந்து கோவை பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அபாரமாக விளையாடிய ராம் அரவிந்த், 48 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன்பின் களமிறங்கிய அதீக் உர் ரஹ்மான் 2 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இருப்பினும், கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற சத்ருவேத், 23 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அசத்தினார்.

இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் மதுரை பாந்தர்ஸ் நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

 

Exit mobile version