Site icon Sangathy News

2000 காட்சிகள்.. ஒரே வாரத்தில் பாதியாக குறைந்த கமலின் தக் லைப்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘தக் லைப்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு உருவான படம் ‘தக் லைப்’. இதில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை. ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஒரு வாரத்தில் இந்திய அளவில் ரூ.45 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைப் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதனால், திரையரங்குகளில் தக் லைப் படத்தின் காட்சிகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, முதல் நாளில் 4,900-க்கு அதிகமாக காட்சிகள் (ஷோவ்ஸ்) வெளியான தக் லைப் படத்தின் காட்சிகள் ஒரே வாரத்தில் பாதியாக குறைந்து 2,100 காட்சிகளாக திரையிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version