Site icon Sangathy News

தம்மை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு – உதய கம்மன்பில குற்றச்சாட்டு..!

அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ், தம்மைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இனவாதத்தைத் தூண்டும் வகையில் தாம் கருத்துக்களைத் தெரிவித்ததாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சில தரப்பினரால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

323 கொள்கலன்கள் விடுவிப்பு விடயத்தில் மோசடி இடம்பெறவில்லை எனத் தெரிவிப்பதற்கு, இந்த அரசாங்கம் தங்களுக்கும், ஜனாதிபதிக்கும் நெருக்கமானவர்களை உபயோகித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வது குறித்து, ஜனாதிபதியுடன் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் ஆலோசித்துள்ளனர்.

இனவாதத்தைத் தூண்டியதாக இந்த சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்தால், நீண்டகாலம் தடுத்து வைக்கலாம் என இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி யேர்மனிக்குச் சென்று, விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான நெடியவனை சந்திக்கவுள்ளதாகத் தாம் தெரிவித்த கருத்தினூடாக இனவாதம் தூண்டப்படுவதாக சில தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும், இது, தாமாகத் தெரிவித்த கருத்து அல்லவெனவும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயங்களையே தாம் தெரிவித்ததாகவும், அதற்கான ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version