Site icon Sangathy News

வாடகை வீட்டில் ஷாருக்கான்…சொந்த வீட்டிற்கு புதிய சிக்கல்

‘கிங் ஆஃப் பாலிவுட்’ என அழைக்கப்படும் ஷாருக்கானின் பிரமாண்ட பங்களாவான ‘மன்னத் பங்களா’ விற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடகை வீட்டில் வசிக்கும் ஷாருக்கான், 20 ஆண்டுகாலம் வாழ்ந்த கனவு இல்லத்துக்குள் மீண்டும் காலடி எடுத்து வைக்கமுடியுமா? என கேள்வி எழும்பியிருக்கிறது.

மும்பையின் முக்கியப் பகுதியில், 27 ஆயிரம் சதுர அடியில் பள பளப்பாக அமைந்துள்ளது, ஷாருக்கானின் அரண்மனை போன்ற இந்த பிரமாண்ட பங்களா. மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மன்னத் பங்களா, ஷாருக்கானின் கனவு இல்லமாக திகழ்கிறது. பாந்த்ரா கடற்கரை பகுதியில் இருக்கும் இந்த பங்களா, 100 ஆண்டுகள் பழமையானது என்ற சிறப்பை கொண்டது.

அதற்குக் காரணம், மன்னர் காலத்தில் கட்டப்பட்ட, 100 ஆண்டு பழமையான பங்களா என்பதால், மன்னத் பங்களாவை புதுப்பித்து, விரிவுபடுத்தும் பணியை ஷாருக்கான் மேற்கொள்கிறார் என்றும் கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. அந்த இரண்டு மாடிகள் கட்டப்பட்டதால்தான், ஷாருக்கானின் மன்னத் பங்களாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டுவதற்கு, கடற்கரையோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை ஷாருக்கான் மீறி இருப்பதாக மாநகராட்சி மற்றும் வனத்துறையில், சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் புகார் அளித்துள்ளார். அப்புகாரை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மன்னத் பங்களாவில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் இருந்த ஷாருக்கானின் பணியாளர்களிடம் “Renovation அதாவது புதுப்பித்தல் பணிகளுக்காக வாங்கப்பட்ட, அனுமதிகள் தொடர்பான ஆவணங்களை உடனே தாக்கல் செய்யவேண்டும்” என வனத்துறை அதிகாரிகள் கேட்டதாக கூறப்படுகிறது.

அதுவே, ஷாருக்கானின் மேலாளர் பூஜா இந்த ஆய்வு குறித்து கூறும்போது, “எந்த புகாரும் எழவில்லை. அனைத்தும் வழிகாட்டுதலின்படிதான் நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறும்போது, “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் மன்னத் பங்களாவை ஆய்வு செய்துள்ளோம். அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்யப்படும்” என்று முடித்துக்கொண்டனர்.
ஆனால், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒய்.பி சிங் கூறும்போதுதான், ஷாருக்கானின் பங்களாவில் நடந்திருக்கும் விதிமுறை மீறல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், வில்லா வியன்னா என்ற பெயரை மாற்றி மன்னத் பங்களாக விதிகளை மீறியுள்ளார்.

மேலும், 2005 ஆம் ஆண்டு மன்னத் பங்களாவிற்கு பின்புறம் இருந்த நிலத்தில் நீட்டித்து புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்நேரம், நில உச்ச வரம்பு சட்டம் அமலில் இருந்ததால், பெரிய அபார்ட்மெண்ட் கட்ட முடியாது. ஆகவே, சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க ஷாருக்கானும், அவரது மனைவி கெளரி கானும் மன்னத் பங்களாவில் 12 தனி தனி பிளாட்கள் இருப்பதாக கூறி, மாநகராட்சியில் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

12 பிளாட்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் கொடுத்தவுடன், ஷாருக்கான் 12 பிளாட்களையும் ஒன்றாக இணைத்து, ஒரே குடும்பம் வசிக்கக்கூடிய வகையில் ஆடம்பர பங்களாவாக மாற்றி விட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது, மாநகராட்சி அதிகாரிகளின் துணை இல்லாமல் இதை செய்திருக்க முடியாது. இப்போது நில உச்ச வரம்பு அமலில் இல்லாவிட்டாலும் விதிகளை மீறி 12 பிளாட்களை ஒன்றாக இணைத்துள்ளனர்” என சுட்டிகாட்டியுள்ளார், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒய்.பி சிங்! இதனால், ஷாருக் கானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஷாருக்கான் மன்னத் பங்களாவை காலிசெய்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறியதால், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், கடற்கரையோர வியாபாரங்கள் பாதித்ததாகவும் ஷாருக்கான் இல்லாததால் இங்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது எனவும் வியாபாரிகள் வேதனையோடு கூறிவருகிறார்கள்.

இப்படி, மன்னத் பங்களா புதுப்பிக்கப்பட்டு, அவர் வாடகை வீட்டிலிருந்து கனவு இல்லத்திற்கு திரும்பி வரும் நாளுக்காக அவரது ரசிகர்களும் வியாபாரிகளும் ஏக்கத்தோடு காத்திருக்கும் சூழலில்தான், அவரது கனவு இல்லத்திற்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிங் ஆஃப் பாலிவுட் இதிலிருந்து எப்படி தப்பிக்கப்போகிறார், என புருவம் உயர்த்தி பார்த்துக்கொண்டிருக்கிறது, பாலிவுட் திரையுலகம்!

Exit mobile version