இலங்கைப் பொருட்களுக்கான “பரஸ்பர வரியை” அமெரிக்கா 20 சதவீதமாகக் குறைத்ததற்கு ஈடாக, இலங்கை அமெரிக்காவிற்கு பரந்த அளவிலான சலுகைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சலுகைகள் அமெரிக்க தொழில்துறை மற்றும் விவசாயப் பொருட்கள் இரண்டுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து வரும் 1,161 தொழில்துறை மற்றும் 42 விவசாயப் பொருட்களுக்கு அமெரிக்கா அதே சலுகையை வழங்கியுள்ளது.
இலங்கைக்கு மிகவும் சாதகமாக இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது.
இந்தநிலையில், இலங்கை 500 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய் மற்றும் 300 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எரிவாயு என்பவற்றை அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்ய உறுதியளித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
இதேவேளை பங்களாதேஸ், கம்போடியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தங்களைப் போலவே, இலங்கைக்கான அமெரிக்க ஏற்றுமதிகள் மீதான அனைத்து வரிகளையும் நீக்குமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

