Site icon Sangathy News

சர்வதேச ரீதியில் பேசுபொருளான முத்தையன்கட்டு இளைஞரின் மரணம்

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்கள் சர்வதேச ரீதியில் பேசப்படும் நிலையில், முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான், முத்தையன்கட்டு இளைஞர் மரணமும் தற்போது அதில் சேர்ந்துள்ளது.

குறித்த இளைஞர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ஏனைய 4 இளைஞர்களுடன் தொழில் நிமித்தம் இராணுவத்தினரின் அழைப்பின்பேரில், இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர்.

இதன்பின்னரே குறித்த 5 இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவமும், அதில் ஒரு இளைஞர் மரணமான சம்பவமும் நிகழ்ந்துள்ளதாகப் பிரதேச பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனை மறுத்துள்ள இராணுவம், குறித்த 5 இளைஞர்களும், அத்துமீறி முகாமுக்குள் பிரவேசித்ததாகவும், அவர்கள் விரட்டப்பட்ட நிலையில், அதில் ஒருவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இருப்பினும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவத்தினரால் கூறப்படும் இளைஞரை, படையினரின் தாக்குதலிலிருந்து தாமே மீட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் வாக்குமூலங்கள் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய படையினரின் வாக்குமூலங்கள் அனைத்தையும் மையப்படுத்தி, காவல்துறையும் விடயத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, காவல்துறையினரால் படையினரின் 3 பேர் கைது செய்யப்பட்டு, நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்

இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தின்போது மரணமான இளைஞரின் சகோதரர் இன்று யாழ்ப்பாண மருத்துவமனையில் வைத்து, நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்குத் தகவல் அளித்துள்ளார்.

குறித்த இளைஞரின் மரணம் தொடர்பான உடற்கூறு பரிசோதனை யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் நடைபெறுகின்ற நிலையிலேயே அவரின் சகோதரர், தமது தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதற்கிடையில், இந்த இளைஞரின் மரணம் தொடர்பில் படையினருக்குத் தொடர்பில்லை என்று நேற்று எமது செய்திச்சேவைக்குக் கூறியிருந்த இராணுவப் பேச்சாளரை இன்றும் எமது செய்திச்சேவை தொடர்பு கொண்டு வினவியது.

சம்பவம் தொடர்பில் 3 படையினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் நிலைப்பாடு தொடர்பாக எமது செய்திச்சேவை அவரிடம் கேள்வி எழுப்பியது.

இதற்குப் பதிலளித்த இராணுவப்பேச்சாளர், படைத்தரப்பில் 3 பேர், காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்

எனினும் அவர்கள் சந்தேகத்தின் பேரிலேயே விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேநேரம் இராணுவமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இருந்தபோதும் கைது செய்யப்பட்ட மூவரும் குறித்த சம்பவத்தில், தொடர்புபட்டது உறுதி செய்யப்பட்டால், இராணுவத்தரப்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பவத்தின் போது, தாக்குதலுக்கு உள்ளாகிக் காயமடைந்ததாகக் கூறப்படும் இளைஞர் தொடர்ந்தும் முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version