இந்திய அணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும், 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் இடம்பெற மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த டி20 உலகக்கிண்ணத் தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் அறிவித்தனர்.
இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடவுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டு அடுத்த உலகக்கிண்ணத் தொடர் வரை விளையாடுவதை இலக்காகக் கொண்டுள்ளனர்.
எனினும், உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஏறக்குறைய 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது.
இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான பி.சி.சி.ஐ இன் திட்டத்தில் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் இருவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்திய அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
அந்த ஒருநாள் தொடரே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேசத் தொடராக அமையலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

