Site icon Sangathy News

புதையல் தோண்டிய 6 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம்

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவில் உள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து ஒருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சத்தை தண்டப்பணம் செலுத்துமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (17) புதன்கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

கடந்த ஜூலை மாதம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றில், வாகனேரி காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட தென்பகுதியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்டவிரோத புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்து வழக்கு இடம்பெற்று வந்த நிலையில், குறித்த வழக்கு நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் 6 பேரும் 3 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும், அதனை செலுத்தாத பட்சத்தில் 3 வருட சிறை தண்டனை என நீதவான் தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.

 

Exit mobile version