Site icon Sangathy News

இன்று 71-வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார். 71-வது தேசிய திரைப்பட விருதுகள் பெறுபவர்கள் குறித்து ஆகஸ்ட் 1-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

தேசிய திரைப்பட விருது விழாவில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மேலும், சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதுகளை ‘பார்க்கிங்’ படம் பெறுகிறது. அப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெறுகிறார். ‘வாத்தி’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெறுகிறார்.

மேலும், நடிகை ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது, சுதீப்தோ சென்னுக்கு சிறந்த திரைப்பட இயக்குனராக விருது என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

சிறந்த படமாக 12-வது ஃபெயில், சிறந்த இந்தி படமாக காதல் – எ ஜாக்ஃப்ரூட் மிஸ்டரியும் தேர்வாகி உள்ளது. ஷாருக்கான் (ஜவான்) மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி (12வது ஃபெயில்) சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். சிறந்த நடிகைக்கான விருதை ராணி முகர்ஜி பெறுகிறார்.

 

Exit mobile version