கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் முறையற்ற திட்டமிடல்கள் குறித்து அதிபர் தரச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றியளிக்க வேண்டுமானால், அவை குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், நெகிழ்வுத்தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறான முறையான கலந்துரையாடல்கள் இன்றி, ஜனவரி 5ஆம் திகதி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலைகளை நடத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதிலொன்றை வழங்குமாறு அவர் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் காரணமாக ஏனைய வகுப்புக்களிலும், குறிப்பாக உயர்தர வகுப்புக்களிலும் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக முதுன்கொடுவ சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக அமுல்படுத்த முடியாது எனத் தெரிவித்த அவர், துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வி தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், இறுதியாகச் செய்ய வேண்டிய மாற்றங்களை முதலில் செய்ய முயற்சிப்பது தோல்வியிலேயே முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பாடசாலை நேரத்தை 2.00 மணி வரை நீடித்ததும், பாடவேளைகளை 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்களாக மாற்றியதும் தோல்வியடைந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். 40 நிமிடங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை 50 நிமிடங்களுக்குள் எவ்வாறு உள்வாங்குவது என்பது குறித்து இதுவரை எவ்வித வழிகாட்டல்களோ அல்லது சீர்திருத்தம் தொடர்பான தொகுப்புகளோ (Modules) பாடசாலைகளுக்கு வழங்கப்படவில்லை.
மேலும், நேர அட்டவணையைத் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முறையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படாதது அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தெளிவற்ற சூழலில் ஜனவரி 5ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
#EducationReform #SriLanka #TeachersStrike #SchoolNews #NimalMudunkoduwa #LKA #கல்வி
Education Reforms in Disarray: Principals’ Union Warns of Trade Union Action Starting January 5
Nimal Mudunkoduwa, General Secretary of the Principals’ Service Union, has raised serious concerns regarding the practical difficulties in implementing new education reforms. He emphasized that for any reform to succeed, the government must engage in constructive dialogue with principals and teachers while maintaining flexibility. He warned that if the Ministry proceeds with plans to extend school hours until 2:00 PM starting January 5 without such consultations, the union will launch a nationwide trade union action. He urged the Ministry to provide a clear response before the deadline.
Mudunkoduwa highlighted that the reforms introduced for Grade 6 have created a crisis in other grades, including Advanced Level classes. He criticized the approach of implementing domestic education reforms based on discussions with the World Bank and the Asian Development Bank, stating that real solutions require consulting local education experts and unions. He further noted that the decision to extend periods from 40 to 50 minutes is a failure, as the existing curriculum is designed for 40-minute slots, and no modules or guidelines have been provided to schools on how to bridge this gap. With schedules being changed repeatedly via circulars and a lack of clear instructions to zonal offices, he questioned the feasibility of starting the new academic term smoothly on January 5.

