தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களை சொந்த பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதிக்கு அழைக்க உத்தரவிட்டுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராடியபோது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கு நேற்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் நேற்றைய தினம் மன்றில் முற்பட்டனர். அவர்களின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், மூத்த சட்டத்தரணிகளான என். சிறீகாந்தா, கு. குருபரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஐவரையும் சொந்ப் பிணையில் செல்வதற்கு நீதிமன்று அனுமதியளித்தது. அத்துடன், வழக்கையும் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு அழைக்கவும் உத்தரவிட்டது.
வழக்கு தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணி சுமந்திரன்,
“பலாலி பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கைகளை சட்டவிரோதமான முறையில் ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறான நடவடிக்கைகளை ஆரம்பிக்க அவர்களுக்கு உரித்து கிடையாது. அமைதி வழி போராட்டங்களை முன்னெடுக்க அரசமைப்பில் தீர்க்கப்பட பல வழக்குகளிலும் உரித்து கொடுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு பொலிஸாரே பாதுகாப்பு வழங்கி உதவ வேண்டும்.
“தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த சில மாதங்களாகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நயினாதீவு விகாராதிபதி முன்வைத்த சமரசத் திட்டத்தைத் தொடர்ந்து, இந்த விவகாரம் இப்போது சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது” – என்றார்.

