யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நிறைபோதையில் சிகிச்சை பெற வந்தவர், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 1.40 மணியளவில் நிறைபோதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 24ஆம் இலக்க விடுதியில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது.
இதன்போது, தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களுடன் அவர் முரண்பட்டதுடன், விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டார்.
இதனை அடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்றபோது, தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அச்சுறுத்தியுள்ளார்.
அவரை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடிக்க முற்பட்டவேளை ஒரு உத்தியோகத்தருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

