
யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க கலந்துகொண்டார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி –
தமிழ் மக்களின் மிக முக்கியமான கலாசார தினமான தைப் பொங்கல் விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம். ஒரு நாடு அழகாக இருக்கவும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஒவ்வொரு கலாசாரத்தையும் மதித்து ஏற்றுக்கொள்வது முக்கியமாகும்.
மேலும், இந்நாட்டின் வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஓர் ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது என்று மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். அரச அதிபர் ம.பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா மற்றும் படை அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.