Site icon Sangathy News

காணிகள் அற்ற மக்களுக்கு வடக்கில் காணி நன்கொடை! – ஜனாதிபதி அநுரகுமார ஆலோசனை

காணி அற்றவர்களுக்காக வடக்கு மாகாணத்தில் காணி நன்கொடை வழங்கும் நடவடிக்கை தொடர்பில் உரியவாறு பரிசீலிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்தார்.

மானிடம் – பூமிதான இயக்கத்தின் கோரிக்கை கடிதத்தை, ஜனாதிபதியிடம் சமர்பித்தபோதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, மானிடம் – பூமிதான இயக்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள காணிகளை நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த காணிகள் தொடர்பான ஆரம்ப கட்ட களஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அவற்றை காணி அற்றோருக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்தார்.

முன்னதாக, டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட, காணிகள் அற்றோருக்கு, நன்கொடையாளர்களால் வடக்கு மாகாணத்தில் காணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மானிடம் – பூமிதான இயக்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஊடாக அறிவித்தனர்.

குறித்த காணிகளில் வீடுகளை அமைப்பதற்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது, குறித்த அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக, டித்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்டங்களை சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்கி, காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் என மானிடம் – பூமிதான இயக்கம் ஜனாதிபதிக்கு வழங்கிய கோரிக்கை கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version