Site icon Sangathy News

அரச கட்டடங்களில் கைதிகளை தடுத்து வைப்பதற்கு தீர்மானம்! – நீதி அமைச்சர் ஹர்சன

போதைப்பொருள் சார்ந்த குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், சகல சிறைச்சாலைகளிளும் நெரிசல் காணப்படுகிறது. எனவே, பயன்பாட்டில் இல்லாத அரச கட்டடங்களில் சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளை தடுத்து வைக்க தற்காலிகமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், பல்லேகலை, தும்பர ஆகிய சிறைச்சாலைகளில் தற்போது 2 ஆயிரத்து 246 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சிறைச்சாலைகளில் 699 சிறைக்கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். இடப்பற்றாக்குறை காரணமாகவே இந்த நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலையின் புதிய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தி தற்போது சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடியை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய தும்பர சிறைச்சாலையை புனரமைக்க 436.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இந்த நெருக்கடிநிலை காணப்படுகிறது. போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களால் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலைமையில் காணப்படுவதால் சகல சிறைச்சாலைகளில் நெரிசல் நிலைமை காணப்படுகிறது.

அரச இரசாயன பகுப்பாய்வாளர் சேவையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறையால் போதைப்பொருள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் காணப்படுகிறது. இதனால், சிறைச்சாலையில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அரச இரசாயன பகுப்பாய்வாளர் சேவைக்கு 52 பேரை புதிதாக இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 32 பேரை சேவையில் இணைத்துக் கொள்வவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது – என்றும் தெரிவித்தார்.

Exit mobile version