Site icon Sangathy News

திருமலை புத்தர் சிலை விவகாரம்: தேரர்களின் மனுக்கள்மீது வரும் 30ஆம் திகதி தீர்ப்பு!

திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு தேரர்களின் மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 4 பிக்குகள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை கல்யாண வங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறும் – அவர்களின் விளக்கமறியல் உத்தரவை வலுவற்றதாக்கக் கோரியும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் இன்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய, நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைகள் நடைபெற்றன.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்களின் அமர்வு இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை எதிர்வரும் மாதம் 30 ஆம் திகதி அறிவிப்பதாக கட்டளை பிறப்பித்தனர்.

Exit mobile version