கிறீன்லாந்து விவகாரம் எங்களுக்கு தேவையற்ற விஷயம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள கிறீன்லாந்து, ஐரோப்பிய நாடான டென்மார்க் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்பந்தம் அளித்து வருகிறார். மேலும், கிறீன்லாந்தில் வாழும் சுமார் 57 ஆயிரம் மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் டாலர் அளிப்பேன் என்றும் ட்ரம்ப் கூறினார்.
இதற்கு டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்பை அடுத்து கிறீன்லாந்தில் டென்மார்க் அரசு படைகளை குவித்து கண்காணித்து வருகிறது. இதற்கிடையில் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிறீன்லாந்து மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் மொஸ்கோவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு புடின் அளித்த பதில் வருமாறு: கிறீன்லாந்து பகுதியை ஒரு காலனியாகவே டென்மார்க் நிர்வகித்து வருகிறது. அப்பகுதி மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
எந்த காரணத்துக்காகவும் நாங்கள் கிறீன்லாந்தை உரிமம் கொண்டாட மாட்டோம். இது எங்களுக்கு தேவையில்லாத விஷயம். இந்த பிரச்சினையை அவர்களே (அமெரிக்கா, டென்மார்க்) தீர்த்து கொள்வார்கள். இவ்வாறு அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

