Site icon Sangathy News

ரணிலுக்கு எதிரான விசாரணை ஒரு மாதத்துக்குள் நிறைவுறும்! சட்ட மா அதிபர் தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான விசாரணைகளை ஒரு மாத காலத்துக்குள் நிறைவு செய்து மார்ச் மாதத்தில் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. இதன்போது, சட்ட மா அதிபர் தலைமையில் முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்தத் தகவலை நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.

இந்த வழக்கில் நேற்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றில் முற்பட்டிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, அவரின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வு பிரிவுக்குச் சென்ற ரணில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமானதால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மருத்துவ காரணங்களுக்காக தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 ஆட்பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளை நேற்றைய தினத்துக்குள் நிறைவுறுத்த நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

நேற்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ரணிலின் பிணையை இரத்துச் செய்யுமாறும் வழக்கு தாக்கல் செய்த தரப்பு கோரியது. எனினும், முன்னர் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை என்று நீதிவான் கூறினார். அத்துடன், வழக்கை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Exit mobile version