தமிழக அரசு சார்பில் 2016 முதல் 2022 வரையிலான 6 ஆண்டுகளுக்கான திரைப்பட விருது கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகர், நடிகை விருதுகள் தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்டோ ருக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2016 முதல் 2022 வரையிலான 6 ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், 2014 முதல் 2022-ம் ஆண்டு வரையான சிறந்த நெடுந்தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, வாழ்நாள் சாதனையாளர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சின்னத்திரை விருதுகளும், 2015 -16 கல்வியாண்டு முதல் 2021 – 22 கல்வியாண்டு வரை தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியர், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகியவை சிறந்த திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் ஆர்.பாண்டியராஜன், கவுசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சீவ், ஜெய்ஆகாஷ், கார்த்திக்ராஜ் ஆகியோர் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ராதிகா சரத்குமார், வாணிபோஜன், நீலிமாராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1 லட்சமும், 3-ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கு சிறப்புப் பரிசு ரூ.1.25 லட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த நடிகர், நடிகையர் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1 லட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 லட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. திரைப்பட விருதுகள் வழங்கும் விழா பிப்.13-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கவுரவிக்கிறார்.

