Site icon Sangathy News

சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதற்கு சிறீதரன் எம்.பியும் ஆதரவு!

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதாகக் கூறப்பட்டாலும், தமிழ் மக்களுக்கு இதுவரை உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையையும் வலியுறுத்தி நாளைய தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர்.

குறிப்பாக கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் நாளைய தினம் சுதந்திர தினத்திற்கு எதிரான வலுவான போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக திருகோணமலையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமையும், 1989 இல் கிளிநொச்சியில் சுதந்திர தினத்தை கொண்டாட முற்பட்ட ஈரோஸ் போராளிகள் மூவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய ‘அனுர அரசாங்கம்’ கூட தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு (சமஷ்டி) போன்ற விடயங்களில் உரிய கரிசனை காட்டவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய கொடி தமிழ் மக்களை அரவணைக்கவில்லை எனவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் நாளைய நாளை துக்க நாளாகவும், கரிநாளாகவும் அனுஷ்டித்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோருகின்றோம்” என்றார்.

Exit mobile version