இலங்கையின் 78ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தைத் தமிழர்களின் துயர்மிகுந்த கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, மாபெரும் எழுச்சிப் பேரணி கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
வடக்கு – கிழக்குத் தமிழர் தாயகத்தில் தொடரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியினை நிலைநாட்டல் போன்ற விடயங்களை வலியுறுத்தியும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் ஆரம்பமான பேரணி டிப்போ சந்திவரை சென்று, ஒருங்கிணைந்த சிவில்அமைப்புகளின் கரிநாள் பிரகடனத்துடன் நிறைவடைந்தது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், வடக்கு – கிழக்குக் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், தாயகச் செயலணி, வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒழுங்கமைப்பில்நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்குப் பூரண கதவடைப்பு மூலம் வடக்கு – கிழக்கு வர்த்தக சமூகம் பேராதரவை வழங்கியிருந்தது.
பேரணியில் ஈடுபட்டவர்கள் ‘வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்’, ‘வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்’, ‘ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களின் கரிநாள்’ போன்ற கோஷங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், முழக்கங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் எழுச்சிபூர்வமாகப் பங்கேற்றனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மதகுருமார் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், துரைராசா ரவிகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமலாக்கப்பட்டோர்களின் உறவினர்கள் , சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
