Sangathy News

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் 78ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ‘இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை காலை 07.15 மணியளவில் ஆரம்பமாகியது.

முக்கிய பிரமுகர்களில் முதலாவதாக பிரதம நிதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.  இரண்டாவதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார். மூன்றாவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

இதனையடுத்து இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார். அவரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச் அபயரத்ன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி.ருவன் செனரத், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோர் சிறப்பாக வரவேற்றனர்.

ஜனாதிபதியின் வருகையின் போது இலங்கை இராணுவத்தினால் வருகையை அறிவிக்கும் வாத்திய இசை இசைக்கப்பட்டது. மங்கள மேள வாத்திய முழக்கத்திற்கும் சங்கொலிக்கும் மத்தியில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9வது நிறைவேற்றதிகார ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

மாணவ மாணவிகளால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோர் இணைந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை விசேட மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து, கொழும்பு 8 தேவி பாலிகா கல்லூரி, கொழும்பு 4 விஸாகா 16 கல்லூரி, கொழும்பு 7 சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் 10 மாணவிகளால் “ஜயமங்கள கீதம்” மற்றும் “தேவா வஸ்ஸது காலேன்” இசைக்கப்பட்டது.

பின்னர், தாய் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த அனைத்து இலங்கை பிரஜைகளையும் நினைவு கூர்ந்து உணர்வுபூர்வமாக 02 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9வது நிறைவேற்றதிகார ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாட்டு மக்களுக்கு விசேட உரை முன்வைக்கப்பட்டது.

பின்னர் இலங்கை முப்படைகளான இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப் படை உள்ளிட்ட இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்பு படைகள் மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 4602 படை வீரர்கள் உள்ளிட்ட வாகனங்களுடன் மரியாதை அணிவகுப்பில் பங்களித்தனர்.

சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு நிறைவடைந்ததையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , பிரதம நிதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன சுதந்திர சதுக்கத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்

 

Exit mobile version