நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி ஏந்திய நபர்கள் குவாராவில் உள்ள வோரோ கிராமத்துக்குள் நுழைந்து, கடைகளையும் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
மேலும், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 35 சடலங்கள் மீட்கப்பட்டது என்று கைமா பிராந்தியத்தின் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சையது பாபா அகமது தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பலர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர் என்றும், இன்னும் பல சடலங்கள் கிடைக்கலாம் என்றும், பாரம்பரிய மன்னர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தத் தாக்குதலைக் காவல் துறை உறுதிப்படுத்தியது, ஆனால் உயிரிழப்பு விவரங்களை வழங்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு பயங்கரவாதக் குழுக்களே காரணம் என்று மாநில அரசாங்கம் குற்றம்சாட்டியது.
குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரஸாக் இந்தத் தாக்குதலைக் கண்டித்தார். “மாநிலத்தில் நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட விரக்தியில் பயங்கரவாதக் குழுக்கள் இந்தக் கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளன” என்று அவர் கூறினார்.
தீவிரவாதிகள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நைஜீரிய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் பல பகுதிகள் ஆயுதமேந்திய கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. நைஜீரியாவில் கொள்ளையர்கள் மற்றும் தீவிரவாதக் குழுக்கள் அடிக்கடி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.

