Site icon Sangathy News

அரச அதிகாரிகளாலேயே வடக்கு, கிழக்கில் காணி, மத உரிமைகள் மீறப்படுகின்றன

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் அரச அதிகாரிகளாலேயே காணி உரிமைகள், மத உரிமைகள் என்பன மீறப்படுகின்றன. அத்துடன், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் படைத் தரப்பினரின் தொடர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் – என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றத்தையே அநுர குமார தலைமையிலான அரசாங்கம் எட்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலவரம் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

1983 – 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன. தேசிய நல்லிணக்கம் சார்ந்த வாக்குறுதிகளின் இடையே, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அநுர குமார திஸநாயக்க அரசாங்கம் மிகச்சொற்ப விடயங்களையே செய்திருக்கிறது.

சுயாதீன வழக்குத்தொடுநர் பணிமனையை நிறுவுதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதுமாத்திரமன்றி இலங்கையின் குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் ஓரினச் சேர்க்கை மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் குற்றமாக்கப்பட்டுள்ளன.

உலக உணவுத் திட்டத்தின் தரவுகளின் பிரகாரம் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் மந்தபோசணையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு அவசியமான பொருட்கள், சேவைகளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றன.
அநுர குமார திஸநாயக்க அரசாங்கத்தில் சமூக பாதுகாப்பு செலவினங்கள் மிகக்குறைந்த மட்டத்திலேயே பேணப்படுவதால் பல்வேறு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் செயல்திட்டத்துக்கு அமைவாக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள், ஏற்கனவே நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்கள் மீதான நிதியியல் மீட்சி சார்ந்த அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் ஊழலை முறியடிப்பதில் ஓரளவு முன்னேற்றம் அடையப்பட்டிருக்கிறது.

Exit mobile version