Site icon Sangathy News

பாகிஸ்தான் மசூதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 31 பேர் பலி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள மசூதியில் தனியொருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்; 160 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நிகழ்ந்தது.

இஸ்லாமாபாத்தின் ஷெஷாத் டவுன் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள மசூதியின் வளாகத்துக்குள் நுழைய ஒருவர் முயன்றுள்ளார். அவரை காவல் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதன்பிறகு அவர் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இதில் 31 பேர் உயிரிழந்தனர், 169 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், தாக்குதலை மேற்கொண்டவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என அந்நாட்டு காவல் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இதன் பின்னணியில் தெஹ்ரீக்-இ-தலிபான்-பாகிஸ்தான் தீவிரவாத படையின் சதி இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள நீதிமன்றத்துக்கு வெளியே கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. அதில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், எதிர்க்கட்சி தலைவர் அல்லாமா ராசா நசீர் அப்பாஸ் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும், இதற்கு நிச்சயம் அரசு தரப்பு தக்க பதிலடி தரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version