Site icon Sangathy News

மானிப்பாயைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் கைது

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிக
பெறுமதியுடைய போதைப்பொருளை கடத்தி வந்த மானிப்பாயைச் சேர்ந்த பிரபல
வர்த்தகர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்,
குறித்த போதைப்பொருளை வாங்கி செல்வதற்காக நீர்கொழும்பில் உள்ள பிரபல
நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த மன்னாரை சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்
உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்த விமானத்தில்
வந்த பயணி ஒருவரின் பயண பையில் இருந்து 2 கிலோ 116 கிராம் எடையுள்ள
சுமார் 2 கோடியே 11 இலட்ச ரூபாய் பெறுமதியான குஷ் போதை பொருள்
மீட்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து குறித்த பயணியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த பயணி மானிப்பாய் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளம் வர்த்தகர்
எனவும் , வர்த்தக நோக்கம் என கூறி பல தடவைகள் வெளிநாடு சென்று
வந்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , தான் கொண்டு வந்திருந்த
போதைப்பொருளை வாங்குவதற்காக நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர
விடுதியில் இருவர் காத்திருப்பதாகவும் அவர்கள் தொடர்பிலான தகவல்களையும்
கைதான நபர் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில் குறித்த விடுதிக்கு சென்ற பொலிஸார் , போதைப்பொருளை
வாங்க காத்திருந்த இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும்
மன்னார் பகுதியை சேர்ந்த 43 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும் , அவர்களில்
ஒருவர் தொழிநுட்பவியலாளர் எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸார் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version