நடிகர் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே கார் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அஜித் குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அவருடைய அணி பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் கலந்துகொண்டது. சில போட்டிகளில் வெற்றியையும் பெற்றது. தற்போது அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்க்யூட்டில் நடந்த பந்தயத்தில் அஜித் பங்கேற்றார். நடிகர் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு ஆகியோர் சமீபத்தில் அவரை அங்கு சந்தித்தனர்.
அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினமும் அங்கு வருகின்றனர். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். இந்நிலையில் அங்கு கூடிய ரசிகர்கள் சிலர் அவரை, ‘தல’, ‘தல’ என்று கோஷமிட்டனர்.
இதைக் கண்ட அஜித்குமார் கோபமடைந்தார். “தயவு செய்து பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள். இது தியேட்டர் கிடையாது” என்று அவர்களிடம் கூறினார். மேலும் இதுபோன்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளில் சத்தம் போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு முன்பும் அஜித்குமார் இவ்வாறு ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

