Site icon Sangathy News

2026ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும்!

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் என்றும் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை பிற்பகல் நுவரெலியாவில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாம் அனுபவித்த துன்பங்களை நமது பிள்ளைகள் அனுபவிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும், எந்தவொரு பிள்ளையும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு பலியாகாத நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இந்த வேலைத்திட்டத்தின்போது பொறுமையாக காத்திருக்க யாருக்கும் நியாயமான உரிமை இல்லை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, இவ்விடயத்தில் தன்னைப் பற்றி தான் உறுதியளிப்பதாகவும்,மதத் தலைவர்கள், அரசியல் அதிகாரம், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என்ற வகையில் அனைவருக்கும் உள்ள பொறுப்புகளை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க தேசிய அளவிலான அரசியல் தலைமை, செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மற்றும் பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு செயல்படுத்தப்படுகிறது. அந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு பரந்த பிரச்சாரத்தின் ஊடாக சமூகத்தில் இந்த அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய வலையமைப்பை அகற்றவும், புனர்வாழ்வு வாய்ப்புகளை வலுப்படுத்தவும், போதைப்பொருள் பயன்பாட்டைக் கைவிட விரும்புவோருக்கு வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மலையக மக்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பரவலான விழிப்புணர்வு பொறிமுறையின் மூலம் அந்த மக்களை அதிலிருந்து விடுவித்து அவர்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய மாகாண வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 91,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதோடு,1818 சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் நீண்டகால விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 1566 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் பிரஜையொருவருக்கு அநீதி நடந்தால் அவர் எங்கு செல்ல வேண்டும். அவர் பொலிஸிற்குச் செல்வார். தனக்கு நடந்த அநீதிக்கு அவர் நீதியை எதிர்பார்ப்பார். அவர் நீதிமன்றத்தை நாடுவார். அநீதிக்கு நீதியை எதிர்பார்ப்பார். அநீதிக்கு எதிராக நீதியை நிலைநாட்ட சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தில் இது மிகவும் அத்தியாவசியமானது. எனவே சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம். சட்டத்தின் ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. சட்டம் சிலந்திவலையைப் போன்றது என்பார்கள். சிறிய விலங்குகள் சிக்கிக் கொள்ளும் பெரியவை தப்பித்துக் கொள்ளும் என்பார்கள். இவ்வாறு தான் பொதுமக்கள் மத்தியில் சட்டம் தொடர்பான நம்பிக்கை காணப்படுகிறது. ஆனால் நாட்டை கட்டியெழுப்புவதற்கு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். ஒருவருக்குள்ள அதிகாரம் ,செல்வம் என்பவற்றினால் சட்டத்தில் இருந்து தப்ப முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கக் கூடாது. பணம்,அதிகாரம் இருந்தால் மட்டுமன்றி நியாயமாக சட்டம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு எழவேண்டும்.

சட்டம் தன்னிடம் வர முடியாது.தன்னிடம் அதிகார வளையம் இருக்கிறது என சட்டத்தை புறக்கணிக்கும் சிலர் இருந்தார்கள். அவ்வாறான நாட்டினால் முன்னோக்கிச் செல்ல முடியாது. அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். சட்டத்திற்க அஞ்ச வேண்டும். அந்த நிலை எமது நாட்டில் இல்லை.

2026 ஆம் ஆண்டு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர்கொடுக்கும் வருடமாக இருக்கும் என நான் உறுதியளிக்கிறேன்.அனைவரும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும். சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் முன்னேறியது கிடையாது.

சட்டம் வீழ்ச்சியடைந்த இடத்தில் குற்றவாளிகளின் அதிகாரம் மேலோங்கியிருக்கும்.சட்டம் இல்லாத இடத்தில் குற்றவாளிகள் உச்சத்தில் இருப்பார்கள். இது தான் நிஜம். அவ்வாறான நாட்டினால் முன்னேற முடியாது. சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்திய நாட்டை உருவாக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்,அமைச்சின் செயலாளர், பொலிஸ் மாஅதிபர்,முப்படை அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம். கருப்பு நாடுகள் பற்றி அறிந்திருப்பீர்கள். சட்டத்தின் வீழ்ச்சியே அந்த நாடுகளில் காணப்படுகின்றன. சட்டம் வீழ்ச்சியடைந்த இடத்தில் குற்றவாளிகள் நீச்சலடிப்பார்கள்.சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் நாட்டை நாம் உருவாக்குவோம். எமக்கு எவ்வாறான நாடு தேவை. நாம் பெற்ற துன்பங்களை எமது பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது. நாம் எதிர்கொண்ட சவால்களை எமது பிள்ளைகளும் முகங்கொடுக்காத நாடு அவசியம். – என்றார்.

Exit mobile version