Sangathy News

சட்டத்தரணி சுட்டுப் படுகொலை: வடக்கு, கிழக்கில் சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பு!

சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை முழு நேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்தில்…

சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் இன்று முழு நேர பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

சட்டத்தரணிகளின் குறித்த போராட்டத்தால் யாழ் மாவட்டத்தில் இன்று வழக்குகளை எதிர்கொண்ட பலர் இடர்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவியும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடருடையவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கருதப்படுகின்றது.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.

அத்துடன் இந்த தாக்குதல் நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தல் என்றும், குற்றவாளிகளைத் தாமதமின்றி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தியிருந்தனர். குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில்…

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவிலும் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

திருகோணமலையில்…

சட்டத்துறையை உலுக்கிய கொடூர சம்பவத்துக்கு எதிராகவும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி இன்று திருகோணமலை நீதிமன்றத்திற்கு முன்பாக கறுப்புக்கொடி கட்டி வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட சமூகத்தினர் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பங்கேற்ற சட்டத்தரணிகள் கருத்து தெரிவிக்கையில், சட்டத்தரணி மீது நடத்தப்படும் தாக்குதல், முழு நீதித்துறையின்மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அரசின் பொறுப்பாகும். குறிப்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான துரிதமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தையும் அவர்கள் குறிப்பிட்டார்.

Exit mobile version