Site icon Sangathy News

பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு சட்ட மூலமும் எமது நாட்டுக்கு அவசியமில்லை – யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர்

எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்காலத்தில் கொண்டுவர முயற்சிக்கின்ற பயங்கரவாதம் தொடர்பான சட்டமூலத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் இன்றையதினம் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமாக தமிழ் மக்கள் செல்லொணா துயரங்களை அனுபவித்தார்கள். எத்தனையோ பேரின் வாழ்க்கையில் கவலைகளும், வலிகளும், இழப்புக்களும் ஏற்பட்டன.

ஆகவே இவ்வாறான ஒரு சட்டமூலத்தை நீக்குமாறு நீண்ட காலமாக அரசாங்கங்களை, தமிழ் மக்களாகிய நாங்கள் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனால் தற்போது அந்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குகின்ற பாணியில் புதிய ஒரு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய சட்டத்தின் மூலமாகவும் தமிழ் மக்களுக்கு பிரதானமான பாதிப்புகள் ஏற்படும். இதன்மூலம் அவர்களுடைய வாழ்க்கையானது தொடர்ச்சியாக பயத்தின் மத்தியிலேயே தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும், அமைதியாகவும், பயமில்லாமலும் வாழக்கூடிய நிலைமையை ஏற்படுத்துவதற்கு பழைய பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு, புதிதாக எந்த சட்டமூலத்தையும் அறிமுகம் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடமும், நீதி அமைச்சிடமும் தமிழ் மக்களாகிய நாங்கள் முன்வைக்கின்றோம்.

எமது இந்த கோரிக்கையை அரசாங்கமானது ஏற்று, தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்து தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை இந்த நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Exit mobile version